இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கி பிரதிநிதிகள் நேரடியாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி பதில்களை வழங்க தயாராக உள்ளனர் என்று மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொது நிதி குழுவின் முன் ஆளுநர் ஆஜராகியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, பணவியல் கொள்கை, பணவீக்கம் மற்றும் மாற்று விகிதங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில்கள் வழங்கப்படாதது குறித்து கவலை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் கூறியதாவது: “நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் முதலில் நிதி அமைச்சரிடம் அனுப்பப்படுகின்றன. சில நேரங்களில் கேள்விகள் கடைசி நேரத்தில் கிடைக்கக்கூடும். இருந்தபோதும், மத்திய வங்கி அவற்றுக்கான பதில்களை விரைவாகத் தயாரித்து அமைச்சரிடம் அனுப்புகிறது,” என அவர் விளக்கினார்.
அவர் மேலும் கூறியதாவது, “நிதி அமைச்சரின் வழியாக வரும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய வங்கி சரியான நேரத்தில் பதில் அளிக்கிறது. இருப்பினும், சில கேள்விகள் பிற நிறுவனங்களையும் உள்ளடக்குவதால் தாமதம் ஏற்படுகிறது. எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நேரடியாக நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக உள்ளோம்.” என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.








