நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, பத்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வின் போது சபாநாயகராக கம்பஹா மாவட்ட உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் பதவி விலகினார்.

தமது கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரை குறித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சபாநாயகர் பதவிக்கு தற்போது சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சபாநாயகர் பதவிக்காக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவை நியமிக்கத் தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நேற்றைய தினம் ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி கலந்துரையாடியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரை நிறுத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பில் ஏனைய எதிர்க்கட்சித் தரப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவை எட்டவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமக்கு பல்வேறு முன்மொழிவுகளும் கருத்துக்களும் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அவர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி அவர்களது நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்வதும் இங்கு முக்கியமாகும். தகுதிகளைத் தவறான முறையில் முன்வைத்து மக்களைத் தவறாக வழிநடத்துவதும் தவறான செயற்பாடாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியை அங்கத்துவப்படுத்தி பிரதிநிதி ஒருவர் முன்னிலைப்படுத்தப்படுவாராயின் அதற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here