போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து முன்னுரிமை பாதைகளை நிர்வகிக்கும் விதிமுறைகளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (29) முதல் கடுமையாக அமுல்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மேல் மாகாணத்தில் ஏழு பேருந்து முன்னுரிமை பாதைகளை உள்ளடக்கியது மற்றும் பயணிகள் தங்கள் இலக்குகளை பாதுகாப்பாகவும் சரியான நேரத்திலும் அடைய உதவும் அதே வேளையில் நெரிசலை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மெட்ரோ பேருந்து நிறுவன தலைவர் எஸ்.எம்.யு.பி. திலகரத்ன தெரிவித்தார்.

கொழும்புக்கு பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிறுவனத்தால் இயக்கப்படும் 104 சொகுசு பேருந்துகளும் செப்டம்பர் 29 முதல் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, பேருந்து முன்னுரிமை பாதைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என தெரிவித்தார்.

இந்த நேரங்களில் ஏனைய வாகனங்கள் நியமிக்கப்பட்ட பேருந்து முன்னுரிமை பாதைகளை பயன்படுத்தவோ அல்லது நிறுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை.

அவசரநிலை அல்லது விபத்தை தவிர்க்கவும், கடுமையான நெரிசலில் பயணிக்கவும் அல்லது தேவைப்படும் இடத்தில் திரும்பவும் அவசியமான போது மாத்திரமே வாகனங்கள் பாதைகளுக்குள் நுழைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மெட்ரோ பேருந்துகள் மட்டுமன்றி மற்ற பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் இந்த பாதைகளை பயன்படுத்தலாம் என ரணகல குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here