நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள்.
நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம். வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.








