தாலல்ல, மாத்தறையில் உள்ள நாவொட்டுன்ன கடற்கரையில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளன.
கடற்படையின் கூற்றுப்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (24) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய போதைப்பொருட்கள் அடங்கிய 10 சாக்குகள் மற்றும் 11 பயணப் பைகள், அந்த சரக்கை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு டிங்கி படகும் மீட்கப்பட்டன.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) உதவியுடன் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் 275 கிலோ ஹெரோயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக போதைபொருள் ஒப்படைக்கப்பட்டன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் கைப்பற்றப்பட்ட சரக்கை பார்வையிட்டனர்.
ஆய்வின் போது பேசிய பிரதி அமைச்சர் ஜயசேகர, கடந்த ஒரு வருடத்தில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கூட்டு நடவடிக்கைகள் மூலம் சுமார் 97 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
ஆயுதப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு உள்ளிட்ட அமைப்புக்கள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை 1818 அல்லது 1997 என்ற ஹோட்லைன் எண்கள் மூலம் வழங்குமாறு பிரதி அமைச்சர் பொதுமக்களை வலியுறுத்தினார்.








