இலங்கையின் ஜனநாயக முறை மற்றும் மக்களின் இறையாண்மையை அரசாங்கம் சீர்குலைப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளதுடன்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலையும் கண்டித்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உரையாற்றிய விக்கிரமசிங்க, கட்சியின் புதிய திட்டம் “இறையாண்மையை” பாதுகாப்பதிலும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தும் என்றார்.

டி.எஸ். சேனநாயக்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும், கட்சி தலைமைக்கு சேனநாயக்கவின் பெயரை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முன்மொழிந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

D.A. ராஜபக்சவும் கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றும், அவரது இரண்டு மகன்கள் பின்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாக பதவி வகித்ததாகவும் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இந்த மாதம் முதல் ஜே.ஆர். ஜயவர்தனவின் நினைவு நிகழ்வுகள் உட்பட தொடர் நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கும் என்றும், டிசம்பரில் கட்சி மாநாடு நடத்தப்படும் என்றும் விக்கிரமசிங்க கூறினார்.

“அந்த மாநாட்டில், தற்போதைய காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள் மற்றும் கொள்கைகளுடன், புதிய முகங்களுடன் கூடிய நவீன ஐக்கிய தேசியக் கட்சியை 21 ஆம் நூற்றாண்டிற்கான இலங்கையை கட்டியெழுப்ப முன்வைப்போம்” எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசிய விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவு இறையாண்மை மக்களுக்கு சொந்தமானது மற்றும் அதை எவரும் பறிக்க முடியாது என தெளிவாக கூறுவதாக தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தமது கட்சி எதிர்ப்பதாகவும், அதற்கு பொது வாக்கெடுப்பின் அங்கீகாரம் தேவை என்றும் கட்சி கருதுவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளை இலக்கு வைக்கும் கட்டுப்பாடுகள், அரசியல்வாதிகளின் கைதுகள் மற்றும் சுயாதீன தொழில்முறை அமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை நாட்டின் ஜனநாயக முறையை அச்சுறுத்துவதாகவும், எதிர்க்கட்சியை பலவீனப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பௌத்த மதகுருமார்கள் மீதான தாக்குதல்களையும் விக்கிரமசிங்க விமர்சித்தார்.

“இந்த நாடு பாராளுமன்றத்திலிருந்து ஆளப்படுகிறதா அல்லது பெலவத்தையிலிருந்து ஆளப்படுகிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை” என விக்கிரமசிங்க கூறியதுடன், மக்களின் இறையாண்மையை பாதுகாக்க அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் நாமல் ராஜபக்சவை பற்றி குறிப்பிட்ட விக்கிரமசிங்க, D.A. ராஜபக்ச  கட்சியின் ஆரம்ப உறுப்பினர் என்றும், நாமல் ராஜபக்ச அவரது பேரன் என்றும் கூறினார்.

“நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடையில் உள்ளார். அதையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என விக்கிரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here