லீசிங் தவணையை சரியாக செலுத்த தவறிய குற்றச்சாட்டில் இவ்வாண்டின் கடந்த 8 மாதக் காலப்பகுதியில் 5000 வாகனங்களுக்கும் அதிகமானவை அந்தந்த நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக லீசிங் மற்றும் கடன் வழங்குநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 10000க்கும் அதிகமான வாகனங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீசிங் தவணைகளை வழங்குவதாக வாகனங்களைப் பெற்று நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தவணைகளை சரியாக செலுத்த முடியாமால் இருப்பவர்களுக்காக சலுகைகளை வழங்குமாறு கடந்த சில நாட்களாகவே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்ததாக சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய கூறியுள்ளார்.
நிதி நிறுவனங்களிடம் காணி மற்றும் செத்துக்களை அடமானம் வைத்தவர்களுக்காக, கடனை மீள செலுத்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை சலுகை வழங்க அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டாலும் அவர்களை பொருளாதார ரீதியில் உறுதியாக்க எதுவித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக இவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் காணி மற்றும் செத்துக்களை அடமானம் வைத்தவர்களின் சொத்துக்கள் கூட இழக்கப்படும் என அவர் கூறினார்.
வாகனங்களுக்கு மூன்று தவணைகளை வழங்க முடியாமல் போனால் வாகனத்தை பலாத்காரமாக கொண்டு செல்லும் காரணத்தினால் தவணைகளை செலுத்தும் மக்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அசங்க ருவன் பொத்துபிட்டிய கூறியுள்ளார்.








