புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறான பதிவுகள் வீடுகளில் நபர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்துவதோடு இது திருடர்களுக்கு ஒரு துப்பாக மாறுகிறது என காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது
அத்துடன் டிஜிட்டல் தடயங்களுடன் தொடர்புடைய அபாயங்களையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள காவல்துறை, நிகழ்நேரத் தகவல்களையோ அல்லது வருகைப் பதிவுகளையோ பகிர்வதைத் தவிர்க்குமாறும், அத்தகைய பதிவுகள் வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை வெளிப்படுத்திவிடும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
உடனடியாக அந்த தகவலை பகிர்வதற்குப் பதிலாக, வீடு திரும்பிய பிறகு உள்ளடக்கத்தைப் பதிவிடும் “லேட்டர்-கிராம்” (later-gram) முறையைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
மேலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தங்கள் பயணங்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாகப் பதிவேற்றுவதைத் தவிர்த்து, பயணம் முடிந்த பிறகு அவற்றைப் பகிருமாறும் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.







