கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு படைத்துள்ளனர்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமியும், இலங்கையின் சங்கமிழ் லியாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டு நடனம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடினர்.

பாரம்பரிய உடை அணிந்த பங்கேற்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த பரதநாட்டியத்தை வழங்கினர். நிகழ்ச்சி மற்றும் நடுவர் மதிப்பீட்டு செயல்முறைக்குப் பின்னர், கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டது.

நடன கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் சார்பாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இதேநேரம் நிகழ்வில் உரையாற்றிய அவர், பங்கேற்ற நடன கலைஞர்களையும் ஏற்பாட்டாளர்களையும் பாராட்டியதோடு, இந்தியா-இலங்கை மக்கள் உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் பங்கையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான சுந்தரலிங்கம் பிரதீப், மகிந்த ஜயசிங்க ஆகியோரும்  கலந்துகொண்டனர். பொது மக்களில் அதிகளவானோரும் இந்த சாதனை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

எல்லைகளைக் கடந்த கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, பரதநாட்டியத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here