பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
முதலில், காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை மற்றும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றிலும் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம், சமீபத்தில் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, பாடசாலை போக்குவரத்து வேனுடன் மோதியதில் நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
அப்போது, குறிப்பிட்ட நேரங்களில் லொறிகள் வீதியோரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கட்டுமானத் துறையினர் எதிர்கொண்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அந்தத் தடையில் இப்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி:
பாடசாலைகள் மற்றும் மாணவர் கடவைகள் அருகே,குறிப்பிட்ட நேரங்களில்,வேக வரம்புடன் மற்றும் பொலிஸாரின் கடுமையான மேற்பார்வையின் கீழ் மட்டுமே கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் நேற்று (17) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.








