2026 முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
புதிய பாடத்திட்டத்தில், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவுப் பாடங்களாக மாற்றப்பட உள்ளன. இது தொடர்பாகவே தங்களது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் தென்னிலங்கை பிரதம சங்கநாயகர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர், சாதாரண தரத்தில் வரலாறு கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் நேற்று (ஜூலை 19) நடத்திய கலந்துரையாடலில், வரலாறும் தொல்பொருளும் பாடசாலை கல்வியில் கட்டாயப் பாடங்களாக தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இதேவேளை, வரலாறு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தேரர்கள் குழுவொன்று, இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து இந்த பாடப் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளது.








