பொதுக் கல்வி நவீனமயமாக்கலின் கீழ் சிறுவர் புத்தகம் ஒன்றை அச்சிடுவதற்காக தேர்தெடுக்கும் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்த வளவாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு கொடுப்பனவாக பத்து இலட்சத்து 90 ஆயிரம் (10,89,546) ரூபா செலவிடப்பட்ட போதும் அந்த கருத்தரங்களில் ஒரு சிறுவர் புத்தகம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை பணத்தை செலவழித்து கருத்தரங்கு நடத்தி சிறுவர் புத்தகம் ஒன்றை அச்சிடுவதற்கு முடியாமல் போனதால் செலவழித்த தொகை பயனற்ற செலவாக மாறியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்தரங்கில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 36 எழுத்தாளர்கள் சமர்ப்பித்த 64 கையெழுத்துப் பிரதிகளில் ஒரு பிரதி கூட அச்சடிக்க ஏற்றதல்ல என கல்வி வெளியீடுத் திணைக்களம் முடிவு செய்திருந்தது. இவ்வாறு நடத்தப்பட்ட கருத்தரங்கிலிருந்து அச்சிடுவதற்கான சிறுவர் புத்தகத்தைத் தேர்வு செய்ய முடியாததால், குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர் ஒருவரைக் கொண்டு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் முடிவு செய்தது. அதற்காக 57 இலட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து பதினெட்டு (57,59,018) ரூபா செலவிடப்பட்டுள்ளது.
புத்தகங்களின் 1,55,475 பிரதிகள் சிங்களத்திலும் 73,475 பிரதிகள் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கணக்கறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.








