ஏறாவூர் மைலம்பாவெளி பகுதி, பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிஸாரின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு  பொலிஸாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/02/2025) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வர்த்தகர் குணரட்னம் மதிகுமார் ஏறாவூர் மைலாம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி சென்றதையடுத்து, அவரை முந்திச்சென்று தாம் பொலிஸ் நீ பிழையாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதாக தெரிவித்து வர்தகர் மீது தமது தலைக்கவசத்தால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடி பொலிஸாரை அங்கிருந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தி பொலிஸ் அவசர இலக்கமான 1919 தோலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து அங்கு ஏறாவூர் பொலிஸார் வந்து விசாரணையை மேற்கொண்ட போது தாக்குதலை நடாத்திய பொலிஸார் இருவரும் மதுபோதையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் குறித்த பொலிஸார் இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் அங்கு அருகிலுள்ள வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த இரு பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் கடமையாற்றிவரும் இருவரும் சம்பவதினமான நேற்று காலை  11.00 க்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவரும் இருவரை கைது செய்வதற்காக கடமை கையேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மது போதையில் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிஸாருக்கு  எதிராக பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here