உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தம்பதியினரின் சொத்துக்களையும் உடைமைகளையும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுப் பிரிவு முடக்கியுள்ளது.

சந்தேக நபர்களின் நிதி நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த தம்பதியினர் பொரல்லையில் உள்ள பேஸ்லைன் வீதியில் உள்ள சிறி சர உயனவில் வசித்து வருகின்றனர். எனவும் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தத் தம்பதியினர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள், போதைப்பொருள் மூலம் பெற்ற பணத்தை அப்பெண்ணின் தாயாருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுவதன் மூலம் தங்களின் சட்டவிரோத வருமானத்தை மறைக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நடத்தப்பட்ட நிதி விசாரணையில், 32 வயதான அப்பெண், பணமோசடி செய்யப்பட்ட நிதியைக் கொண்டு அசையா சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2023-ல், அவர் அத்துருகிரிய, ஒருவல, பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு பேர்ச் நிலத்தையும் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டையும் கொள்வனவு செய்ததாக கூறப்படுகிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பொலிஸார் குறித்த சொத்துக்களுக்கு ஏழு நாள் முடக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

அத்துருகிரியவின் ஒருகொட பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஆராயும் புலனாய்வுப் பிரிவு குறித்த 37 வயதான கணவரையும் அவரது 32 வயதான மனைவியையும் கைது செய்தது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், கணவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு வாகனம் மற்றும் கணவர், மனைவி, மாமியார் ஆகியோருக்குச் சொந்தமான ஆறு வங்கிக் கணக்குகள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here