மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பாக ஒரு தொழிலதிபரை கிங்ஸ்பரி உணவகத்தில் சந்தித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் வலுவாக நிராகரித்தார்.
இது தொடர்பாக சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய பிரதி அமைச்சர் அபேசிங்க,
“நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்களால் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பொது அதிகாரிகளாக நாங்கள் தினசரி முதலீட்டாளர்களையும், புதிய முதலீட்டுத் திட்டங்களில் ஆர்வமுள்ளவர்களையும் சந்திப்பது வழக்கம். ஆனால், சாணக்கியன் குறிப்பிட்டது போல மதுபான உரிமம் குறித்த எந்த விவாதமும் நடைபெற்றதில்லை. அத்துடன், எனக்கு அதுபற்றி எந்தக் கடிதமும் வரவில்லை,” என கூறினார்.
அத்தோடு “யூடியூப் அல்லது சமூக ஊடகங்களில் தோன்றும் விடயங்களை அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டாம். ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்றுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்
“பிரதி அமைச்சரின் உரை தனிப்பட்ட அறிக்கையா அல்லது இது சிறப்புரிமைக் குழுவில் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன்,“இந்த விவகாரத்தை அரசாங்கம் விசாரித்து, சிசிடிவி காட்சிகளையும், தொடர்புடைய கடிதத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொறுப்பைத் தவிர்க்க தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிடக் கூடாது,” என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில், பிரதி அமைச்சர் அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, கிங்ஸ்பரி உணவகத்தில் தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்து மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதித்தனர் என சாணக்கியன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாத விவாதங்கள் வெடித்துள்ளன.