புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்த ஒருவர் நேற்று (21.08) மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் செவ்வாய்க்கிழமை (20.08) இரவு வீட்டை விட்டு துவிச்சக்கர வண்டியொன்றில் வெளியேறிச் சென்றிருந்ததாகவும், அதனையடுத்து அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர் என்றும் நேற்று கற்பிட்டி – அல்மனார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த நபர் மரமொன்றில் தொங்கிய நிலையில் இருப்பதனை அவரது சகோதரர் கண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பின்னர், இதுபற்றி கற்பிட்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here