மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கிருந்த 104 கைதிகள் 7 சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தும்பர, வெலிக்கட, பூஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இந்த கைதிகள் மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நடவடிக்கை) மற்றும் ஊடக பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

ஒரு அறிவிப்பை வெளியிட்ட அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதி தடை அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளை சந்திப்பது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையின் உள்ளே கைதிகளால் அமைதியின்மை ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று (02) காலை 6.00 மணியளவில் பாதுகாப்பு பிரிவினரால் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கைதிகள் சிறையின் பல சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 6 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் வத்தளை ஹெந்தல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது இந்த சம்பவத்தை எதிர் கொண்டுள்ளார்.

தற்போது அமைதியின்மைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை பாதுகாப்பிற்காக பொலிஸ், கலவர தடுப்பு பிரிவு, இராணுவம், கடற்படை மற்றும் அதிரடிப்படை உறுப்பினர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், சிறைச்சாலைக்குள் நிலைமையை வானில் இருந்து கண்காணிக்க ட்ரோன் மற்றும் பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றையும் விமானப்படை பயன்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், குறித்த பகுதியின் அமைதியை பாதுகாக்கும் நோக்கில், ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹர சிறைச்சாலை சுற்றியுள்ள 3 கிராம சேவகர் பிரிவுகளுக்கு நேற்று இரவு முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு பின்னர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here