ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக  ஒருவர் ஆள்மாறாட்டம் செய்வதாக  ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்டவர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் பணம் செலுத்துமாறு, அவர்களைக் குறித்த மோசடி செய்பவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இது ஒரு மோசடி என்று குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் திட்டங்களின் சமர்ப்பிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நடைமுறைகள் மூலம் மாத்திரமே கண்டிப்பாக வழங்கப்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளது.

நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல் கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி ஆட்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் இந்த விடயத்தில் விழிப்பாகச் செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here