உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025 ) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 243 வட்டாரங்களுக்காக 3519 போட்டியாளர்கள் போட்டியிடுவதாகவும், வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய சனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும், வட்டாரங்களில் நடைபெறும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட இறுதி ஆசனங்களின் எண்ணிக்கை யினை வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்கள் தெளிவூட்டல்களை முன்வைத்தார்.

இக் கலந்துரையாடலில் தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் சுயேச்சைக்குழுத் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.

(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here