எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி கடந்த 21ஆம் திகதி கொழும்பு பிற்பகல் பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லி நியமிக்கப்பட்டார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த விக்டர் ஸ்டான்லி, இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த காலத்தில் எமது நாட்டில் இருந்த பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே. நாட்டு மக்கள் வரிசைகள் இருந்தனர். இன்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த காலத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது.
மேலும் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து, அவருடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அவர் கூறியுள்ளமை குறிப்பித்தக்கது.








