ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு நடவடிக்கையை பூர்வாங்க விசாரணைக்காக (Pre-trial Conference) அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முறையான தகுதிகளை பூர்த்தி செய்யாது பிரதிவாதி யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தை புரிந்ததாக தெரிவித்து இலஞ்ச ஆணைக்குழுவால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







