மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால்  வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே வியாபாரத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற சண்டையில் வர்த்தகர் ஒருவர் மீது கத்தி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03/03/2025) இரவு இடம்பெற்றள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் 4 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய வர்த்தகரான டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமை.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனத்தை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்தார் அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்தகர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here