கிளிநொச்சி தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தர் ஒருவரை அச்சுறுத்தி 34 குடும்பங்களின் வாக்கு அட்டைகளை திருடிய நபரொருவர் நேற்று (10.09) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அம்பாள் நகர், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ராசலிங்கம் மனோஹரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி தபால் நிலைய தபால் விநியோகஸ்தர் ஒருவர் வாக்கு அட்டை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது, சந்தேக நபரின் தாயும் சகோதரியும் வாக்கு அட்டைகளைப் பெற்றிருந்த போதும் உத்தியோகபூர்வ வாக்கு அட்டை கிடைக்காமல் தபால் விநியோகஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபர் தபால் விநியோகிப்பவரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து 34 குடும்பங்களுக்கு சொந்தமான வாக்கு அட்டைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் குழு, சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாக்கு அட்டைகளை கண்டு பிடித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here