வருமானம் அதிகரித்த போதிலும், 2026/27 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முன் ரூ. 35.6 பில்லியன் நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தேசிய விமான நிறுவனம் இக்காலப்பகுதியில் ரூ. 82.8 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 62.6 பில்லியனாக இருந்தது என பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும், விமான நிறுவனத்தின் செலவு 40.4% அதிகரித்து, ரூ. 67.8 பில்லியனிலிருந்து ரூ. 95.2 பில்லியனாக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக விமான எரிபொருள் செலவு 93% அதிகரித்ததே செலவு கூர்மையாக அதிகரித்தமைக்கான முக்கிய காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அந்த காலாண்டில் விமான நிறுவனம் ரூ. 12.5 பில்லியன் இயக்க நட்டத்தை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்றம் தொடர்பான அழுத்தங்களும் அதன் நிதி செயல்திறனை மேலும் பாதித்துள்ளன.

கட்டமைப்பு பலவீனங்கள், பணப்புழக்க நெருக்கடிகள், அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் கணிசமான கடன் பொறுப்புகள் ஆகியவை விமான நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை பாதிக்கும் முக்கிய சவால்களாக அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய விமான நிறுவனத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.

175 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைத்ததை தொடர்ந்து, 126.5 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைக்கப்பட்ட வங்கி பொறுப்பு மார்ச் 20 ஆம் திகதி அரசாங்கத்தின் கடன் தொகைக்கு மாற்றப்பட்டது.

விமான நிறுவனத்தின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டது.

விமான நிறுவனத்தின் நீண்ட கால நிதி நிலைத்தன்மை மற்றும் அது பொது நிதியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தொடர்ந்து கவலைகள் நிலவும் நிலையில் இந்த சமீபத்திய நிதி புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here