காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது.
குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர், அங்குள்ள ஏனைய வைத்தியர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று மாலை 5 மணிமுதல் அங்குள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் வைத்தியர் நிர்மல் வத்துஹேவா, குறித்த வைத்தியர் சில வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல வருடங்களாக இந்த பிரச்சினை நீள்கிறது, அவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன.
இறுதிக் கட்ட நடவடிக்கையாகவே, இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, உரிய விசாரணைகளுடன் குறித்த வைத்தியர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் வைத்தியர் நிர்மல் வத்துஹேவா தெரிவித்துள்ளார்.







