நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் கிட்டத்தட்ட 40 கிலோகிராம் ‘குஷ்’ எனப்படும் போதைப்பொருளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அழிக்க உத்தரவிட்டிருந்த போதைப்பொருட்கள் என தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம், வானாத்தவில்லுவ, லக்தோட்டையில் உள்ள விசேட போதை அழிப்பு நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில்
39.710 கிலோகிராம் குஷ் போதைப்பொருள், 14.097 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 2.030 கிலோகிராம் கொக்கையின் , 1.002 கிலோகிராம் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஹஷிஷ் 4.139 கிலோகிராம், MDMA -1.200 கிலோகிராம், 26,262 போதை மாத்திரைகள் ஆகியன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை, நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







