நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு முறை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இன்று (6)கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தபால் திணைக்களம் இந்த நிதியை அனுப்பியதாக, நீதிமன்றத்தில் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க தபால் துறைக்கு இலங்கையின் தபால் துறையால் செலுத்தப்பட்ட பணம் கிடைக்காதது குறித்து தாம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த புலனாய்வு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய தபால் சேவைகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் கணக்குத் தகவல்கள் ‘Universal Postal Union” (யுனிவர்சல் போஸ்டல் யூனியன்) மூலம் வழங்கப்படுகின்றன என்றும், இந்த சந்தேகத்திற்குரிய கொடுப்பனவில் அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறு ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகள் பரிமாறப்பட்டன என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய, ஜூன் 2023 முதல், அமெரிக்க தபால் சேவைக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கும் மேலும் 9 மின்னஞ்சல்கள் பெறப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தபால் திணைக்களம் இரண்டு சந்தர்ப்பங்களில், அதாவது பெப்ரவரி 19, 2025 அன்று US$ 435,864 மற்றும் அக்டோபர் 16, 2025 அன்று US$ 190,891 என மொத்தம் 626,755 டொலர்களை மூன்றாம் தரப்பினருக்குத் அனுப்பியுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதோடு எந்த சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லை என புலனாய்வு அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களை கருத்தில் கொண்ட நீதிபதி பசன் அமரசேன, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புப் பிரிவிற்கு, தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் அமைப்பில் கள ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.








