நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ El-Niño நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் 90% வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிலைகளை விடவும் மிகவும் சக்திவாய்ந்த நிலை இந்த ஆண்டு இறுதியில் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் கூறுகிறது.
வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து தெரிவிக்கையில்,
“எல் நினோ நிலை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கான சாத்தியம் 90% க்கும் அதிகம் என்று உலகளாவிய முன்னறிவிப்புகள் காட்டுகின்றன.
இந்த ஆண்டு ஏற்படும் எல் நினோ நிலையை, கடந்த 75 ஆண்டுகளில் அதாவது 1950 முதல் இதுவரை ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, அந்த அனைத்து நிலைகளையும் விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதற்கான சாத்தியம்70% க்கு அருகில் இருப்பதாக முன்னறிவிக்கப்படுகிறது.”என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 37% ஆக குறைந்துள்ளதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போதுள்ள நீரின் அளவு சதவீத ரீதியாக 37% க்கு அருகில் உள்ளது என நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நீரின் அளவு சிறுபோகத்திற்கு போதுமானது என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மழை கிடைக்கும் வரை போதுமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100% உச்ச கொள்ளளவில் இயங்குவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கிறது.
“நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 100% உச்ச கொள்ளளவில் நீர் வழங்கல் செய்யப்படுகிறது. சில மாவட்டங்களில் வறண்ட காலநிலை நிலவினாலும் நீர் வழங்கலை குறைக்கவில்லை. நீர் வழங்கலில் எந்த பிரச்சினையும் இல்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார கருத்து தெரிவித்துள்ளார்.







