பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஆசன பட்டி (Seat Belt) சட்டத்தை எதிர்காலத்தில் மிகவும் கடுமையாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட போக்குவரத்துக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆசன பட்டி அணியாத பேருந்துகளின் உரிமங்களை எதிர்காலத்தில் இரத்து செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.
“ஆண்டுக்கு 2,350 பேர் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர். மேலும் 6,000 பேர் படுகாயமடைகின்றனர். இதைத் தடுக்கும் முயற்சியாக, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்” என்றார் அமைச்சர்.
அதன் ஒரு பகுதியாக ஆசன பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது 2011ஆம் ஆண்டிலேயே சட்டமாக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பெரிதும் அவதானிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், பெரும்பாலான பேருந்துகளில் ஆசன பட்டி வசதி இருந்தபோதிலும், பயணிகள் அதை பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்றும், இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்களிடம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நெருக்கடிகளுக்கு அதன் மேலதிகாரிகளே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.








