ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (29) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, பல முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டை நிறைவு செய்வதையொட்டி முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் முதற்கட்டமாகும்.
ஜனாதிபதி முதலில் மயிலிட்டி துறைமுகத்துக்குச் செல்லவுள்ளார். பின்னர், 70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இது, வடக்கு மாகாணத்திற்கான இரண்டாவது கடவுச்சீட்டு அலுவலகமாகும். இங்கிருந்து ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கும் விஜயம் செய்து, மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் இன்று மாலை பங்கேற்கவுள்ளார். அதேவேளை, சில முக்கிய கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியை ஜனாதிபதி பார்வையிடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நீதிமன்றத்திற்கும் இதுகுறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த பின், ஜனாதிபதி நாளை (30) முல்லைத்தீவிற்கு சென்று வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.






