பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) அதிகாலை நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டது.
திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் எட்டு LS-6 வகை குண்டுகளை வீசி கிராமத்தை குறிவைத்தன.
தாக்குதலால் பலர் காயமடைந்துள்ளதுடன், பலரின் நிலைமை குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை.
உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்றும், பலர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும், சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததை உறுதி செய்கின்றன. உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணம் கடந்த காலங்களில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய மையமாக இருந்தது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் காவல்துறையின் தரவின்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மாகாணத்தில் 605 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 138 பொதுமக்களும், 79 காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்திலேயே மட்டும் 129 சம்பவங்கள் நடந்துள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








