பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீளச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

உருப்பினர் ரஜீவன் தெரிவித்ததாவது:

“நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்டுள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையம் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. அங்கு இலங்கையின் பிற பகுதிகளில் இல்லாத நவீன ஸ்கேன், கதிரியக்க உபகரணங்கள் இருந்தும், சில அதன் காலாவதியான நிலையில் உள்ளன.

இதனை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். சுகாதார அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. வடமாகாணத்தில் சுழற்சி முறையில் ஆளணிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது போதாது. உடனடி நடவடிக்கை தேவை. இந்த நிலையம் இயக்கப்பட்டால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பலர் பயனடைவார்கள்.”

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“இது ஒரு உண்மையான பிரச்சினை. கட்டிடங்கள், உபகரணங்கள் இருந்தும், போதிய ஆளணியின் இல்லாமை காரணமாக மருத்துவமனை இயங்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் வைத்தியர்களை அங்கு பணியமர்த்த முயன்றாலும், அவர்களின் தொடர்ந்த பங்களிப்பு இல்லாததே இன்னொரு சிக்கலாக உள்ளது,” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இப்போது நாங்கள் நிறைவுகாண் ஊழியர்களை பயிற்றுவிக்கின்றோம். இதன் மூலம் அந்த நிலையத்தில் தேவையான மருத்துவ ஆளணியை வழங்க முடியும் என நம்புகிறோம்.

இதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட பெரிய வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அவை முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here