Google தனது செயற்கை நுண்ணறிவு இயங்குதளமான ‘Gemini’-யை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற AI தேசிய கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், “இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட டிஜிட்டல் வளங்களை இலவசமாகப் பயன்படுத்த உதவும்” என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“AI உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதற்கான வழியை இந்த முயற்சி திறக்கும். இது, இலங்கையின் டிஜிட்டல் கல்வி வளர்ச்சிக்கும், AI திறன்கள் மேம்பாட்டிற்கும் முக்கிய ஒத்துழைப்பாக அமையும்.”

இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள் Gemini போன்ற சக்திவாய்ந்த AI கருவிகளை இலவசமாக பயன்படுத்தலாம், Cloud Computing வசதிகளை அனுகலாம், புதிய கண்டுபிடிப்புகள், தீர்வுகள் உருவாக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.

அடுத்த தலைமுறையினருக்கு புதுமை மிக்க சிந்தனைகளை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை உலகளவில் போட்டியிடக்கூடிய திறமைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் இந்த தொழில்நுட்பங்களை பொறுப்புடன் மற்றும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here