சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில், “இலங்கையர் தினம்” எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இந்த ஆண்டில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தனது 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நிகழ்ச்சி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களில் கொழும்பு மாநகர சபை மைதானம், விகாரமாதேவி பூங்கா, அப்பிரதேசத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கிய நான்கு வலயங்களில், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்வுகள், உணவுக் கண்காட்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வு, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் புதிய கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here