யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் நோக்கம் தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு மற்றும் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதாகும்.
அவர் தொழிற்சாலையில் பணிபுரியும் வலை உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வலை உற்பத்தி செயல்முறை, சாதனங்களின் நிலை, மூலப்பொருள் கிடைக்குமுறை மற்றும் தயாரிப்புகளின் விநியோக அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததுடன், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் உபகரண பராமரிப்பு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தார்.
அதிகாரிகளுடனான சிறப்பு கலந்துரையாடலின் போது, தொழிற்சாலையின் செயல்திறனை மேம்படுத்த அமைப்புசார்ந்த மாற்றங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு தேவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், கடல்சார் துறையில் முக்கிய பங்காற்றும் இந்த வலைத் தொழிற்சாலையின் முன்னேற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் தொழிற்சாலை மேலாளர், பொறியியல் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)








