தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பரின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
2026 வரவு–செலவுத் திட்டத்தில், தேயிலைத் துறையில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரம் அமைத்து பங்களித்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ரூ. 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் இருந்து வரவேற்கிறோம்.
இந்த நிதியின் மூலம் ஒவ்வொரு தேயிலைத் தொழிலாளருக்கும் தினசரி சம்பளத்தில் ரூ. 200 அரச நிதியிலிருந்து கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
இலங்கையின் மத்திமலைத்துறை உலக சந்தையில் தக்கவைத்திருப்பதற்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தருபவர்களே தேயிலைத் தொழிலாளர்கள், எனவே அவர்களுக்கு இந்த உயர்வு வழங்கப்படுவது நியாயமானதும் அடிப்படை உரிமையானதும் ஆகும்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 பட்ஜெட் விவாதத்தின் போது, இந்த சம்பள உயர்விற்கெதிராக நிஸாம் காரியப்பர் தெரிவித்த கருத்து வருத்தகரமானதும் கண்டிக்கத்தக்கதுமானது.
தேயிலைத் தொழிலாளர்கள் நூற்றாண்டுகளாக கடின உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி வருகின்றனர்.
அவர்களின் அடிப்படை உரிமைக்கெதிராகப் பேசுவதே தொழிலாளர் வர்க்கத்தின் அர்ப்பணிப்பை அவமதிப்பதாகும் என்றும், பொருளாதார நிதர்சனத்தை உணரத் தவறுவதாகும் என்றும் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலனுக்காக எடுக்கப்படும் ஒரு நியாயமான நடவடிக்கைக்கு எந்தப் பொறுப்புள்ள அரசியல்வாதியும் எதிராக நிற்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தாங்கள் உண்மையில் எங்கு நிற்கிறார்கள் என்பதையும், தொழிலாளர் நலனை ஆதரிக்கிறார்களா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலாளி வர்க்கத்தை ஆதரித்த முந்தைய அரசுகளிலிருந்து மாறுபட்டு, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தொழிலாளர் நலனைக் கவனித்து நேரடியாக நிவாரணம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டத்தக்க சமூகப் பொறுப்புணர்வு செயலாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இறுதியாக, நிஸாம் காரியப்பர் தோட்டத் தொழிலாளர் சமூகத்திடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ரவிகுமார் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.








