மொனராகலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் புத்தல மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, வெஹரகல நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், மேலும் நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர குமார குறிப்பிட்டார்.

வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், கதிர்காமத்துக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணிக்க கங்கையின் இரு கரையோரங்களில் வசிக்கும் மக்கள், கதிர்காமம் மற்றும் செல்லக்கதிர்காமம் புனித பூமிகளில் உள்ள பக்தர்கள் மாணிக்க கங்கையை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனுடன், வெள்ளவாய அலிகொட்ட ஆரு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அலிகொட்ட ஆரின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் வெல்லவாய – வேவல்கதுர வீதி நீரில் மூழ்கியிருப்பதாகவும், மக்கள் மற்றும் ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here