டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம் குறித்த அறிக்கைகள் தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் “டோர்-டு-டோர்” விலை நிர்ணயம் பற்றிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அது இறக்குமதி செலவுகளைப் பற்றியது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதைப் பற்றியது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிக விலைக்கு எரிபொருள் கொல்வனவு செய்ததாக வெளியான விமர்சனங்களை தொடர்ந்து கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திக்குமாரகே மேலும் தெரிவிக்கையில், உலகளவில், மசகு எண்ணெய் பொதுவாக ஒரு பெரலுக்கு 100-டொலருக்கு மேல் விலை காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட டீசல் பொதுவாக ஒரு பெரலுக்கு $200-க்கு மேல் விலை காணப்படும்
சில ஊடகங்கள் கூறியது போன்ற விசித்திரமான விலையில் நாம் ஒருபோதும் எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை.
மசகு எண்ணெயைப் பொறுத்தவரை, கூட்டுத்தாபனம் சர்வதேச சந்தையில் ஒரு பெரலுக்கு $71 முதல் $113 வரை விலையில் கொள்வனவு செய்கிறது.
முறையற்ற அல்லது அதிகப்படியான விலை நிர்ணயம் குறித்த எந்தவொரு கொள்வனவும் இடம்பெறவில்லை.
ஆசியாவில் இருப்போருக்கு கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் விநியோகப் பிரச்சனைகள் போன்ற மேலதிக செலவுகள், விலைகள் அதிகரிக்க காரணமாக அமையும் என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.






