அரச வைத்தியசாலைகளில் இந்த வருடம் 16 புதிய இருதய வடிகுழாய் ஆய்வகங்களை (cardiac cath labs) நிறுவ சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இருதய நோயை விரைவாக கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்தல். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைத்தல் ஆகியன இந்த திட்டத்தின் நோக்கம் என்பதோடு இதன் மூலம் அதிகளவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ஆய்வகங்கள், கொழும்பு, கண்டி, மற்றும் காலி ஆகிய மூன்று தேசிய வைத்தியசாலைகளிலும் மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை, யாழ்ப்பாணம், கலுபோவில, அனுராதபுரம், குருநாகல் ஆகிய போதனா வைத்தியசாலைகளிலும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையிலும் நிறுவப்படவுள்ளன.
மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை, காலி ஆகிய இடங்களில் 4 ஆய்வகங்களுக்காக அரசாங்கம் 715 மில்லியன் ரூபாய் வழங்குவதோடு, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், கலுபோவில ஆகிய இடங்களில் அமைக்கப்படும் 6 ஆய்வகங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 1,188 மில்லியன் ரூபாய் வழங்குகிறது.
அத்துடன் அனுராதபுரம், குருநாகல், பதுளை, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களில் 6 ஆய்வகங்களுக்காக ஜிகா/ஜப்பான் நிறுவனம் 1,200 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது.
இலங்கையில் தற்போது அரச வைத்தியசாலைகளில் 10 இதய வடிகுழாய் ஆய்வகங்கள் (கேத் லேப்) மாத்திரமே உள்ளன. புதிதாக 16 ஆய்வகங்கள் இணைக்கப்படுவதால்,மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிக்கிறது.








