நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

இன்று நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் புதுப்பிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் வார்டு வளாகங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

டெங்கு பரவலை தடுக்க வைத்தியசாலை சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், நுளம்பு இனப்பெருக்க இடங்களை முறையாக வைத்திருக்க வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க பணியாளர்களின் ஆரோக்கியம் முக்கியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

டிக்கோயா, கம்பொல உள்ளிட்ட பிராந்திய  வைத்தியசாலைகளுக்கான பிரதான பரிந்துரை மையமாக உள்ள நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அடுத்த மாத இறுதிக்குள் CT Scan இயந்திரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீராச்சி, வைத்தியசாலை பணிப்பாளர் ஜனக சோமரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here