2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனப் பதிவுத் தகடுகளை 2026 ஜூன் 30-ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT),வாகன உரிமையாளர்களை வலியுறுத்தி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகள் உட்பட, திணைக்களத்தின் வளாகங்களில் ஏறக்குறைய 100,000 வாகனப்பதிவுத் தகடுகள் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு விண்ணப்பதாரர்களால் இன்னும் பெறப்படாத பதிவுத் தகடுகளால் இந்த நிலுவை ஏற்பட்டுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்ட பிரதான அலுவலகத்திலிருந்து தங்களது பதிவுத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்டச் செயலக அலுவலகங்களில் அமைந்துள்ள அந்தந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கிளைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தபப்ட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள அனைத்துப் பதிவுத் தகடுகளையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் நிர்வாகத் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் உரிமையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற எண்ணில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு எண் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








