டித்வா புயலின் தாக்கத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு சுமார் 500 பில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பாரிய சிக்கல்கள் எதுவும் எழாத பட்சத்தில், அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய போது சில்வா இதனை குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தின் ஆரம்பத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சமீபத்திய “தித்வா” புயல் மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் 500 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய சட்டக் கட்டமைப்பு தொடர்பாக சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர், மாகாண சபைத் தேர்தல் முறையைச் சுற்றியுள்ள தீர்க்கப்படாத சட்டச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேர்தல்களை நடத்துவதற்கான சட்ட அடிப்படையைப் பரிந்துரைக்க பாராளுமன்றக் குழு ஒன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வேறு பாரிய சவால்கள் எதுவும் எழாத பட்சத்தில், அடுத்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமாகும் என நம்புகிறோம்,” என சில்வா கூறியுள்ளார்.







