மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்குமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாடாளுமன்றப் பொது நிதிக் குழுவிடம் (COPF) கோரிக்கை விடுத்துள்ளார்.
கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில், மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அது தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தமையை மனோ கணேசன் மேற்கோள் காட்டியுள்ளார்.
அத்தகைய நிதியை வேறு செலவினதுக்கு மாற்றுவதற்கோ அல்லது வேறு பணிகளுக்கு ஒதுக்குவதற்கோ நாடாளுமன்றம் அனுமதி அளிக்கவில்லை என கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
டில்வின் சில்வா கூறிய விடயம் உண்மையாக இருப்பின், அது நாடாளுமன்ற அனுமதியின்றி பொது நிதி, அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற அனுமதி மற்றும் நிதி விதிமுறைகளை மீறி, தேர்தல் நிதியில் ஏதேனும் பரிமாற்றம், மறுஒதுக்கீடு அல்லது செலவினம் நிகழ்ந்துள்ளதா என்பதை ஆராய்ந்து அது குறித்து தீர்மானிக்குமாறு அவர் கோப் குழுவை வலியுறுத்தினார்.
தனது அதிகார வரம்பிற்குள் எடுக்க கூடிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அந்தக் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.








