தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலான காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தேசிய மலேரியா எதிர்ப்பு மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க எச்சரித்துள்ளார்.
நுளம்புகளால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்துப் பேசிய வைத்தியர் பிரசங்க சேரசிங்க, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றுகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதிப்புக்களைத் தடுப்பதற்கும் ஆரம்பகால நோயறிதல் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
நுளம்புகளால் ஏற்படும் நோய்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாக விளங்குவதாகவும், குறிப்பாக தொடர்ச்சியான காய்ச்சல் போன்ற அறிகுறிகளைப் பொதுமக்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் மக்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும், தங்கள் வீடுகள் மற்றும் வெளிப்புறங்களைச் சுற்றியுள்ள நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றவும் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






