தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அந்த பகுதியில் 2 சந்தேகநபர்கள் 17.7 கிராம் ஐஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளில், சந்தேகநபர்கள் அப்பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து கம்பி வடங்களை (கேபிள்களை) வெட்டி திருடியதாக தெரியவந்துள்ளது.
இதனால் 9,22,750 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்களிடமிருந்து விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள் துண்டுகளின் இருப்பும் மீட்கப்பட்டது.
இதேவேளை, தனி நடவடிக்கையில் மொரட்டுவை பொலிஸார் ராவதவத்த பகுதியைச் சேர்ந்த 51 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.
சுமார் 1,80,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கேபிள் களவு உட்பட பல சொத்து திருட்டப்பட்ட சம்பவங்களில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளில் திருடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் திருடப்பட்டதாக நம்பப்படும் செம்பு கம்பி இருப்பும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ராகமை மற்றும் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








