அரச அங்கீகாரமற்ற நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் முன்மொழியப்படும் எந்தவொரு திட்டமும் எந்த சூழ்நிலையிலும் பாடசாலைகளுக்குள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கலந்துரையாடல் அனுராதபுரத்தில் உள்ள மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“தரமான கல்வியை பிள்ளைகளுக்கு வழங்க அரசாங்கம் என்ற வகையில் நாம் பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளோம். எனவே, பிள்ளைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில், வட மத்திய மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி திட்டங்கள், தரம் 5 புலமைப்பரிசில், சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளின் இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் , டிட்வாவினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதேநேரம் கல்வியின் தரம் பரீட்சை பெறுபேறுகளால் மட்டுமன்றி, பாடம் சார்ந்த செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினாலும் தீர்மானிக்கப்படுகின்றது என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here