‘இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும் ஒரு பத்திரிகைச் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), அந்தச் செய்திக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை என்றும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பை அது தவறாகச் சித்தரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த செய்தி “பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்துவதாக அமைகிறது” என்று விபரித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், சர்வதேச கிரிக்கட் சபை தலைவருக்கும் இடையேயான கலந்துரையாடல்கள், கிரிக்கெட் அபிவிருத்தி, அடிமட்ட மற்றும் இளைஞர் திட்டங்கள், மற்றும் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
அந்தச் சந்திப்பின்போது இலங்கை கிரிக்கட் சபைக்கான தேர்தல்கள், கறுப்புப் பட்டியல் போன்ற எந்தவொரு இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் ஜெய் ஷா இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் குறித்த சந்திப்பு தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்திருந்தனர் என்றும், தேர்தல் காலக்கெடு குறித்தோ அல்லது தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் குறித்தோ இருவரும் குறிப்பிடவில்லை என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.







