பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்து பயிற்சி வகுப்பின் உரிமையாளரையும் மற்றும் மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் வயது சுமார் 4 முதல் 12 வரை இருக்கும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் சில குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பைசல் கம்ரான், ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கட்டிடத்தின் கூரை, மோசமான கட்டுமான தரம் காரணமாக இடிந்து விழுந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கட்டிடத்தில் தொழிலாளர்கள் ஓடுகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கூரை திடீரென இடிந்து குழந்தைகள் மீது விழுந்ததாக நேரில் பார்த்த ஒருவர் AFP-யிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கட்டுமான தரங்கள் மற்றும் தரமற்ற கட்டுமான பொருட்கள் காரணமாக கூரை மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here