நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

மேலும் “உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் அரசின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருந்தவர்கள். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

அந்தப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறைச்சாலைகளில் நெரிசல், காலாவதியான சிறைச்சாலை நடைமுறைகள் மற்றும் மோசமான தடுப்புக்காவல் நிலைகள் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க, சிறைச்சாலைகளில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தத் துயரச் சம்பவம் உணர்த்துவதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையும், சுயாதீனக் குழுவொன்றை நியமித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விசாரணையின் முடிவுகள், சிறைச்சாலை நிலைமைகளில் நிரந்தரமான மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையினையும்  வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்குத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புக்கு அமைய சிறைச்சாலைகளை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here