நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று (08) அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து சேவைகளின் வைத்திய பிரிவின் தலைவர் பேராசிரியர் கிளிபோட் பெரேரா, கடந்த ஆண்டு நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் 5,242 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 239 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் ஆண்டு இறுதிக்குள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு மேல் மாகாணத்தை கடந்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வீதி விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் ஊனமுற்றோர் எண்ணிக்கையை குறைக்க போதைப்பொருள் பயன்படுத்தாத சாரதிகள் அவசியம் என்றும், தண்டனைக்கு அப்பால் ஒரு முக்கிய செய்தியை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் பேராசிரியர் கிளிபோட் பெரேரா வலியுறுத்தினார்.
இதன்போது உரையாற்றிய மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க, மாகாணத்தில் சுமார் 11,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் இல்லை என்றாலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
அதேவேளை தேசிய வீதி பாதுகாப்பு பேரவையின் தலைவர் மஞ்சுல குலரத்ன கருத்து தெரிவிக்கையில், தேசிய வீதி பாதுகாப்பு திட்டத்தின் ஒரு நிலையான நடவடிக்கையாகவே நடமாடும் பரிசோதனை அலகு அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதுவரை 15,000 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







